வேதாரண்யம் அருகே இணைப்பு பாலம் வசதி இல்லாததால் மழைக் காலங்களில் ஆற்றைக் கடக்க மக்கள் திண்டாடி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அவரிக்காடு, வண்டல், குண்டூரான்வெளி ஆகிய கிராமங்கள் அடப்பாறு, மல்லாற்று நல்லாறு ஆகிய ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் மழைக்காலங்களில் இந்த ஆறுகளை கடந்து தான் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு 14 கோடி ரூபாய் மதிப்பில் வண்டல் - அவுரிக்காடு இணைப்புப் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
பின்னர் கூடுதலாக 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது எனவும் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மழை வெள்ள காலங்களில் கிராம மக்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் வெளியூர்களுக்கும், பள்ளிக்கும் செல்ல சிரமப்படுகின்றனர்.
மழைக்காலங்களில் ஆபத்தான படகு பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் இணைப்பு பாலப்பணிகள் முடிவடையாததால் ஆற்றைக் கடக்க பள்ளி மாணவ மாணவிகள் கிராம மக்கள் ஏணிப்படி வழியாக பாலத்தின் மீது ஏறி கடக்க வேண்டியுள்ளது எனவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளை பருவமழை துவங்கும் முன்னர் விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.