தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் காய்கறி உள்ளிட்டவற்றை வாங்க மக்கள் சந்தைகளில் குவிந்தனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று காலை முதல் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து 380 வண்டிகளில் காய்கறிகள் வந்திருந்தன. மக்கள் கொரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு வாசகங்கள் வாசிக்கப்பட்டன. சென்னை காசிமேடு மீன்சந்தையில் மீன்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். தனி மனித இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்டவற்றை பின்பற்றாமல் மக்கள் கூடினர். மீன்கள் வழக்கமான விலையைவிட அதிக விலைக்கு விற்கப்பட்டன.
அதேபோல், மதுரையில் பிபி குளம் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். மக்கள் முகக்கவசம் அணியாமலும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமலும் ஒரே இடத்தில் குவிந்ததால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டது. மதுரையில் முகக்கவசம் அணியாதவர்களை கண்காணித்து அபராதம் விதிக்க 12 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தஞ்சையிலும் இறைச்சி மற்றும் மீன் வாங்க ஏராளமானோர் கடைகளில் குவிந்தனர். தஞ்சை கீழவாசல் மீன் அங்காடியில் மக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிக் குவித்தனர்.