வீடுகளை அப்புறப்படுத்தியதால் பிள்ளைகளுடன் வீதியில் நிற்பதாக கண்ணீர் வடிக்கும் சென்னை ஆர்.ஏ.புரம் பகுதி மக்கள், இடிக்கப்பட்ட வீடுகளை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
கலங்கிய கண்கள், சோகம் படர்ந்த முகங்கள், இவைதான் சென்னை - ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்த சாமி நகர் மக்களின் இன்றைய நிலை. அப்பகுதியில் உள்ள சுமார் 260 வீடுகள் பக்கிங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு, அவற்றை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து காவல்துறை பாதுகாப்புடன் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியபோது, அங்கு வசித்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அவர்களில் திடீரென தீக்குளித்த கண்ணையா என்பவர், 90 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. இடிக்கப்பட்ட வீடுகளை புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கலங்கிய கண்களுடன் கோருகின்றனர்.
60 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் தங்களை வெளியேற்றக் கூடாது என்று கோவிந்தசாமி நகர் மக்கள் கோருகின்றனர். மாற்று குடியிருப்புகள் தங்களுக்கு வேண்டாம் என்று மறுக்கும் அவர்கள், இதே இடத்தில்தான் வீடு வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். வசித்துவந்த வீடுகள் இப்போது கான்கிரீட் குப்பையாகக் கண் முன்னே கிடக்க, பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரம் கைக்குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர்.
தங்களுக்கான வாழ்வாதாரம் சூழ்ந்திருக்கும் பகுதியை விட்டுவிட்டு, பல கிலோ மீட்டர் தொலைவில் தரப்படும் மாற்று குடியிருப்புக்கு மாற முடியாது என்கிறார்கள். இந்நிலையில், சென்னை ஆர்.ஏ.புரத்தில் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கை தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.