வாட்டும் வெயிலுக்கு இடையே கன்னியாகுமரி, உதகை, கோவை, கிருஷ்ணகிரி போன்ற சில மாவட்டங்களில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களை ஒருபுறம் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மறுபுறம் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். மழை பெய்தால் தான் தண்ணீர் என்பதால் மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். அவ்வப்போது தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வந்தாலும், போதுமான கோடை மழை பெய்யவில்லை.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை முதல் வெயில் வாட்டி வைத்த நிலையில், ஜூஜூவாடி, முகண்டபள்ளி, மத்திகிரி, பாகலூர் ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகள் எங்கும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கன்னியாகுமரி, உதகை, கோவை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே பெய்த மழையால், இதமான சூழல் நிலவி குளிர்ச்சியான காற்று வீசி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.