அத்திவரதர் பெருவிழாவில் பணம் மற்றும் அசல் ஆவணங்களை தவறவிட்ட மூதாட்டியின் வீடு வரை தேடி சென்று ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் தன்னுடைய கைப்பையை தவறவிட்ட மூதாட்டிக்கு காவலர் ஒருவர் உதவி செய்துள்ளார்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மூதாட்டி ராதாபாய். இவர் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற போது தன் உடன் வைத்திருந்த கைப்பையை தொலைத்து விட்டார். அதனுள் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் 3500 ரூபாய் பணம் ஆகியவை இருந்துள்ளது. அந்த நேரத்தில் பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர் ஆசிர்வாதம் என்பவர் மூதாட்டியின் கைப்பையை கண்டுபிடித்துள்ளார்.
அதில் இருந்த அடையாள அட்டையின் மூலம் வீட்டு முகவரியை தெரிந்துகொண்ட காவலர், தன் பணியை முடித்துவிட்டு சென்னை பெரம்பூரில் உள்ள மூதாட்டியின் வீட்டுக்கே சென்றுள்ளார். மூதாட்டியைக் கண்டு அவர் தொலைத்த கைப்பையையும் பணத்தையும் காவலர் ஆசிர்வாதம் ஒப்படைத்துள்ளார். தொலைத்த பொருளை வீடு தேடி வந்த ஒப்படைத்த காவலருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.