கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் விசாரணை அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையும் கூடும் நிலையில், இந்த விவகாரம் சட்டப்பேரவையில் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிர்ச்சியை ஏற்படுத்தும் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவருகின்றன. அதில் விஷச்சாராயம் குடித்து இறந்தவர் வீட்டிற்கு சென்றவர்களும் விஷச்சாராயம் குடித்து பலியானது அம்பலமாகியுள்ளது.
கருணாபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் விஷச்சாராயம் குடித்து முதலில் உயிரிழந்துள்ளார். சுரேஷின் இறுதி சடங்கிற்கு சென்றவர்களும் விஷச்சாராயம் குடித்துள்ளனர். அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். முதலில் உயிரிழந்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்தே மற்றவர்களும் விஷச்சாராயம் குடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதியதலைமுறை செய்தியாளரிடம் பேசிய அப்பகுதியினர், “விஷச்சாராயம் குடிச்சு இறந்தவரோட இறப்புக்கு போனவங்களுக்கு, அங்கிருந்த சிலரே விஷச்சாராயம் கொடுத்திருக்காங்க. அது விஷச்சாராயம்னு தெரியாம இவங்களும் குடிச்சுட்டாங்க. இப்போ, எல்லாம் முடிஞ்ச பிறகு வித்தவங்க தலைமறைவாகிட்டாங்க” என்றார்.
மற்றொருவர் கூறுகையில் “சாவுக்கு போன இடத்துல அவங்களே தந்தாங்க.. தெரியாம வாங்கி குடிச்சிட்டு வந்துட்டாங்க. என்ன பண்றது..” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அதேபோல இன்னொருவர் கூறுகையில், “சுரேஷ்தான் முதல்ல இறந்தாரு.. அவரோட இறப்புக்கு போனவங்களுக்கும் சாராயம் கொடுத்திருக்காங்க. விஷச்சாரயம் குடிச்ச ஒவ்வொருத்தருக்கா, வாந்தி, வயிற்றுப்போக்குலாம் வந்திருக்கு” என்றனர்.
இறந்த ஒருவரின் குடும்ப உறுப்பின பெண் ஒருவர் கூறுகையில், “காலை 6 மணிக்கெல்லாம் சுரேஷ் இறந்துட்டார். பிரவீன் என்பவரை மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். ஆனால் 7 மணிக்கு மேல் பிரவீனும் இறந்துவிட்டதாக சொன்னார்கள். அவரை கூட்டிக்கொண்டு வந்த ஆட்டோ ஓட்டும் தம்பி உட்பட இன்னும் சிலரும் மீண்டும் விஷச்சாராயத்தை சாப்பிட்டு இருக்கிறார்கள். சாப்பிட்டவர்களில் இருவர் உயிரிழந்தாக கேள்விப் பட்டோம்.
நாங்கள் காலை 11 மணியளவில் செய்தியாளர்களிடம் சொன்னோம். அப்போதே அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகள் நடந்திருக்காது. ஆனால், மாவட்ட ஆட்சியர், இது விஷச்சாராயத்தால் ஏற்பட்ட மரணம் அல்ல என சொல்லிவிட்டார். இதைக் கேட்ட மக்கள் இது சாராயத்தால் ஏற்பட்ட மரணம் அல்ல என நினைத்து மீண்டும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். உயிரிழப்புகளுக்கு முழு காரணம் அரசாங்கம்தான்” என தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில், விஷச்சாரயத்தால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்று முன்பே கூறியிருந்தால் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.