அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்திற்கு தடையில்லை. அமைதியான முறையில் சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில் போராட்டம் நடத்தலாம். போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என்பதை உணர்ந்தே இருக்கிறோம். அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும், அமைதியான போராட்டத்திற்கும் வேறுபாடு உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’எனத் தெரிவித்துள்ளது.
‛நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி மாணவர்கள், அரசியல் கட்சிகள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் ’நீட்' தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தனிநபர்கள் போராடக்கூடாது. சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் நடத்தக்கூடாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் கொண்டு வரப்பட்ட ‛நீட்' சட்டத்திற்கு எதிராக போராடக்கூடாது. கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது கோர்ட்டை அவமதிக்கும் செயல்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இருக்கும் என்பதால், எந்தவகையான போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்னைகளை அரசு கையாள வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி அனிதா மரணம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்தது. எனினும் தடையை மீறி திமுக அந்தப் பொதுக் கூட்டத்தை நடத்தியது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என விளக்கமளித்துள்ளது.