"வெள்ளக் காலத்தில் கூப்பாடு; மற்ற வேளையில் நீர் தர மறுப்பு": பழ. நெடுமாறன் கடும் கண்டனம்

"வெள்ளக் காலத்தில் கூப்பாடு; மற்ற வேளையில் நீர் தர மறுப்பு": பழ. நெடுமாறன் கடும் கண்டனம்
"வெள்ளக் காலத்தில் கூப்பாடு; மற்ற வேளையில் நீர் தர மறுப்பு": பழ. நெடுமாறன் கடும் கண்டனம்
Published on

வெள்ளக் காலத்தில் கூப்பாடு போடும் கேரளம் மற்ற வேளையில் நீர் தர மறுப்பதாக கேரள அரசியல் கட்சிகளுக்கு தமிழர் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையொட்டி உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி உயர்நிலைக்குழுக் கூடி அணையிலிருந்து எவ்வளவு அதிகப்பட்ச நீரை வெளியேற்றி வைகை அணைக்குக் கொண்டுசெல்லலாம் என தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சில தனி நபர்கள் பெரியாறு அணையின் உறுதித்தன்மைக் குறித்து ஐயப்பாடு தெரிவித்து தொடுத்த வழக்கின் விளைவாகவே இவ்வாறு உச்சநீதிமன்றம் தலையிடவேண்டிய நிலைமை உருவானது. சில ஆண்டுகளுக்கொருமுறை கேரள அரசு சார்பில் அல்லது அரசின் பின்னணியில் சிலர் இத்தகைய வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அணையின் உறுதித்தன்மைக் குறித்து கடந்த காலத்தில் ஒன்றிய அரசு அமைத்த 6 நிபுணர் குழுக்கள் ஆராய்ந்து அணை வலிமையாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் தலைமையில் 3 நீதியரசர்களைக் கொண்ட ஒரு குழுவை உச்சநீதிமன்றமே நியமித்தது. அந்தக் குழு, நிபுணர்குழு அளித்த ஆலோசனையை ஆராய்ந்துப் பார்த்தும் அணைக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டும், அணை வலிமையாக இருப்பதாக உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. அதற்குப் பின்னர் “பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம்” என 7.5.2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசனப் பிரிவு தீர்ப்பளித்தது. கேரளத்தைச் சேர்ந்த நீதியரசர் கே.டி. தாமஸ் நடுநிலை தவறாமல் அளித்த இந்தத் தீர்ப்புக்காக கேரள அரசியல் கட்சிகள் அவருக்கு எதிரான அறிக்கைகள் விடுத்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனாலும், ஒன்றிய அரசின் வேண்டுகோளுக்கிணங்க 10கோடி ரூபாய்க்குமேல் தமிழக அரசு செலவழித்து அணையை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது. ஆனாலும், அங்குள்ள சிற்றணையை மராமத்து செய்ய கேரள அரசு முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது. இப்போதும் வெள்ள அபாயத்தைச் சுட்டிக்காட்டி பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டுமென்று கூக்குரல் எழுப்புகிறது.

பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு நீர் கொண்டுவரப் பயன்படுத்தப்படும் குகை வழியின் அளவை அகலப்படுத்துவதற்கும், வைகை அணையின் உயரத்தை மேலும் சில அடிகள் உயர்த்துவதற்கும் கேரளம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இப்போது ஏற்பட்டிருக்கும் பெருவெள்ளக் காலத்தில் வெள்ளநீரை விரைவாக வடிப்பதற்கு உதவியாக இருந்திருக்கும். எதையும் சிந்திக்காமலும், தொலைநோக்குப் பார்வையில்லாமலும் தன்னலத்துடன் மட்டுமே நடந்துகொள்ளும் கேரள அரசியல் கட்சிகளின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

பெரியாறு நதியின் மீது கேரள மாநிலம் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது. அந்த ஆறு தமிழக எல்லைக்குள் 114 சதுர கி.மீ. பரப்பளவுக்கு வந்து செல்வதால் அது இரு மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதியாகும். எனவே, அதன்மீது தமிழகத்திற்கும் சமஉரிமை உள்ளது. பெரியாற்றின் நீரில் கேரளத்தின் அனைத்துத் தேவைகளும் போக, வீணாகக் கடலில் கலக்கும் நீரின் அளவு 2,313மில்லியன் கன மீட்டராகும்.

வெள்ளக் காலங்களில் இந்த அளவைப் போல் பல மடங்கு அதிகமான நீர் கடலில் விழுந்து வீணாகிறது. அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருந்தால் நீரின் அளவு 217.10மில்லியன் கன மீட்டராகும். வீணாகக் கடலில் கலக்கும் நீரில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பெரியாற்றின் மூலம் தமிழகம் பயன்படுத்துகிறது. அதைக்கூட ஏற்கும் மனம் இல்லாமல் கேரளம் நடந்துகொள்கிறது.

கேரளத்தில் உள்ள மொத்த ஆறுகளிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் நீரின் அளவில் ஒரு சிறு பகுதியை கிழக்கே திருப்பினால் தமிழகத்தில் பாசன வசதி பெருகும். இதன்மூலம் வேளாண்மை உற்பத்தி பலமடங்கு கூடும். கேரளத்திற்கு நாள்தோறும் தவறாமல் தானியங்கள், காய், கனி மற்றும் ஆடு, மாடு, கோழி, முட்டை போன்றவை தமிழகத்திலிருந்துதான் அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் நெய்வேலி மின்சாரத்தில் 20% கேரளத்திற்கு அளிக்கப்படுகிறது. இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் தமிழகத்திற்கு தண்ணீர் தர கேரளத்தில் உள்ள கட்சிகள் திட்டமிட்டு மறுப்பதின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுகின்றன. அதனால் ஏற்படும் விளைவு ஒருமைப்பாட்டுக்கே உலை வைக்கும் என எச்சரிக்க விரும்புகிறேன்’’ என்று கூறியிருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com