விதிமுறைகளை மீறி மைதானத்தில் விளையாடிய தனது மகனுக்கு எதிராக பேசிய சமூக ஆர்வலரின் கடையை பூட்டி சீல் வைத்திருக்கிறார் பட்டுக்கோடை சுகாதாரத்துறை ஆய்வாளர் ஆரோக்கியம்.
பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் உள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில், கடந்த சனிக்கிழமை திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் வந்திருந்தார். அங்கு அவர் நோயாளிகளை சந்தித்து மனநலனை மேம்படுத்தும் வகையில் உரையாற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாட்டின்படி நிகழ்ச்சி நடந்தபோது, அவருடன் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர், வட்டாட்சியர் தரணிகா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது, மருத்துவமனைக்கு அருகில் இருந்த மைதானத்தில் இளைஞர்கள் கூட்டமாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
கொரோனா பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற போஸ் வெங்கட்டின் நிகழ்ச்சிக்கு, அந்த விளையாட்டு போட்டி இடையூறாக இருந்ததாக சொல்லப்படுகிறது. மட்டுமன்றி, பொது முடக்க விதிமுறைகளை மீறி இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. தொடர் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சார் ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலீசார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை எச்சரித்து, அவர்களின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த இளைஞர்களில் ஒருவர், அப்பகுதியில் நகராட்சி சுகாதார ஆய்வாளராக பணி புரியும் ஆரோக்கியம் என்பவரின் மகன். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் அவர் மகனுடைய வாகனமும் இருந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் உரிய நபர்களிடம் திருப்பி கொடுக்க முயன்ற போது, 'வாகனங்களை கொடுக்க வேண்டாம்' என்று மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருக்கும் தன்னார்வலர் பக்ருதீன் கூறியதாக, ஆரோக்கியத்திடம் யாரோ கூறி உள்ளார்கள். கஜா புயல் காலங்களிலும், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையங்களில் சமூக ஆர்வலர்களை கொண்டு வந்து சேர்ப்பது, சமூகசேவைகள் செய்வது போன்ற செயல்கள் மூலம் அரசு துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருபவர் இந்த இளைஞர் பக்ருதீன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆத்திரமடைந்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியம், பட்டுக்கோட்டை மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருக்கும் பகுருதீனிடம் தொலைபேசியில் "எனது மகனின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து திருப்பிக் கொடுக்க முயன்றபோது, அந்த இருசக்கர வாகனத்தை திருப்பி கொடுக்க கூடாது என்று போலீசாரிடம் நீ ஏன் தெரிவித்தாய்? உன்னை விட நான் பெரிய ஆள், நான் கூறினால் அனைத்து அரசு அதிகாரிகளும் எனது பேச்சை கேட்பார்கள்.
உன்னை விட எனக்கு இந்த பட்டுக்கோட்டையில் அதிக ஆட்களை தெரியும். நாளை முதல் நீ முறையாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கடை திறந்தால் நிச்சயம் 5000 ரூபாய்க்கு குறையாமல் உனக்கு அபராதம் விதிப்பேன்" என்று எச்சரித்துள்ளார்.
பக்ருதீன், தனக்கும் நடந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தும் அவர் ஏற்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வாகனம் மூலம் காய்கறி விற்பதற்காக தனது கடையை திறந்து பக்ருதீன் காய்கறிகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருக்கும் போது, ஆய்வு மேற்கொள்ள வந்திருக்கிறார் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியம். அங்கு அவர், 'விதிமுறைகளை மீறி கடையை திறந்து உள்ளாய்' எனக்கூறி கடையின் உள்ளே பக்ருதீனின் உறவினர்களை வைத்து பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. கடைக்குள் ஆள் இருக்கிறது என்று அக்கம்பக்கத்தினர் கூறியதை கூட காதில் வாங்காமல் நகராட்சி ஊழியர் பக்ருதீன் உறவினர்களை கடைக்குள் வைத்து பூட்டி சீல் வைத்துள்ளார் .
இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு போலீசார் உதவியோடு கடை திறக்கப்பட்டு பக்ருதீனின் உறவினர்கள் வெளியே வந்துள்ளார்கள்.
இந்த அலுவலர் ஆரோக்கியம், கடந்தமுறை ஊரடங்கின் போது 'சாலையோரங்களில் மீன் கடை போடக்கூடாது' என்று உத்தரவிட்டு, சாலையோரங்களில் நகராட்சி ஊழியர்கள் சேகரித்த குப்பைகளை கொட்டி குடியிருப்பு வாசிகளுக்கு பெரும் தொந்தரவினை கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், செம்பராங்குளம் சுடுகாட்டில் மருத்துவக் கழிவுகளை கொட்டி வைத்து அதனை மொத்தமாக கொளுத்திவிட்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.
இந்நிலையில்தான் தற்போது விதிமுறையை மீறி மைதானத்தில் விளையாடி தன் மகனுக்கு ஆதரவாக, அரசுடன் இணைந்து பணியாற்றும் சமூக ஆர்வலரான பக்ருதீன் மீது மனதில் வன்மத்துடன் செயல்பட்டுள்ளார் சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியம்.
விதிமுறைகளை மீறி விளையாடிய மகனுக்கு ஆதரவாக நகராட்சி ஊழியரின் இந்த செயல் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- ந.காதர் உசேன்