கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி பாட்னா மாவட்ட நீதிமன்றத்தில் கவுசலேந்திரா நாராயணன் என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பாட்னா மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், பிப்ரவரி 13-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உதயநிதி ஸ்டாலினுக்கு பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. நேரில் ஆஜராகாத பட்சத்தில் வழக்கறிஞர்கள் மூலமாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் சம்மனில் கூறப்பட்டுள்ளது.