மரத்தடியில் காத்திருப்பு; சுகாதார சீர்கேடு - செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் அவலநிலை

மரத்தடியில் காத்திருப்பு; சுகாதார சீர்கேடு - செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் அவலநிலை
மரத்தடியில் காத்திருப்பு; சுகாதார சீர்கேடு - செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் அவலநிலை
Published on

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முறையான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால் அங்கு கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2 வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்திவருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 225 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9301 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 94 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 13 ஆயிரத்து 742 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் சிகிச்சைப்பலனின்றி 54 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது.

ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாமை:  

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மொத்தம் 480 படுக்கைகள் உள்ளன. இதில் 325 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. தற்போது அந்த படுக்கைகளும் நிரம்பிவிட்டன. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் நோயாளிகள் மருத்துவமனையின் வெளியே காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த நோயாளிகள் மருத்துவமனையின் வாயிலிலும் மரத்தடிகளிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் தினசரி நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது மட்டுமே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நோயாளி ஒருவருக்கு இடம் கிடைக்கிறது. இந்தநிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது ஒருபுறம் என்றால் நோயாளிகளுக்கு தூய்மையான கழிப்பறை வசதியும் சரிவர கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

கழிப்பறை வசதியின்மை: 

30 நபர்களுக்கு ஒரு கழிப்பறை என்ற நிலை இருக்கும் நிலையில், அதுவும் தூய்மையாக இல்லாத காரணத்தால் நோயாளிகளுக்கு மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் அறிகுறி இருக்கக்கூடிய வார்டில் நோயாளிகளுடன் நோயாளிகளின் உறவினர்கள் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு உள்ளே வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த வார்டில் மூச்சுத்திணறி ஆக்சிசன் உதவியுடன் இருக்கக்கூடிய நோயாளிகள் படுக்கையிலேயே மலம் ஜலத்தை கழித்து விடுகிறார்கள். கழிவறை தட்டுப்பாடு நிலவுவதால், நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை வளாகம் மற்றும் அல்லது செங்கல்பட்டு பகுதியில் உள்ள மற்ற பொது கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் மேலும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

என்ன சொல்கிறார் மருத்துவமனை முதல்வர்:

இதுகுறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல்வரை முத்துக்குமரன் தொடர்பு கொண்டு கேட்ட போது, “ 425 பேர் ஆக்சிஜன் வசதியோடு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 70க்கும் மேற்பட்டோர் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீதம் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோயாளிகளின் உதவிகளுக்காக நோயாளிகளின் உறவினர்கள் ஒருவரை வார்டு பகுதிக்குள் அனுமதிக்கிறோம். மேற்கண்ட நோயாளிகள் அனைவரும் படுக்கையிலேயே மலத்தை கழிப்பதற்கு வசதி செய்து கொடுத்து இருக்கிறோம். நோயாளிகளின் உறவினர்கள் சில நேரங்களில் அதிக அளவில் வார்டு பகுதிகள் வருகிறார்கள்.இவர்களால் கழிவறை அசுத்தம் ஆகிறது. உடனடியாக கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com