காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா (எ) குணசேகரன். இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை - கொலை முயற்சி - ஆள் கடத்தல் போன்ற குற்றங்களை செய்து வருவதாகவும் சுமார் 48 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளைத்துரை தலைமையில் காவல் துறையினர் தீவிரமாக படப்பை குணாவை தேடி வந்தனர். தன்னை காவல் துறையினர் எப்படியும் கைது செய்து விடுவார்கள் என தெரிந்துகொண்ட படப்பை குணா, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு சரணடைந்தார்.
தற்போது படப்பை குணா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராகவும் பதவி வகித்து வருகிறார். இதையடுத்து குணாவும் பாஜக-வில் சேர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே.எஸ்.பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாநில தலைவர் கே.அண்ணாமலை மற்றும் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், மாநில செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளர் வினோத் பி.செல்வம் ஒப்புதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் ஆலோசனை படியும், மாநில ஓபிசி அணி தலைவர் சாய் சுரேஷ் ஆலோசனை படியும் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக குணசேகரன் நியமிக்கப்படுகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக, படப்பை குணா நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜக மாநில பட்டியல் அணி செயலாளராக, நியமிக்கப்பட்ட நிலையில், ரவுடி படப்பை குணாவிற்கும் பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.