மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்த சம்பவங்கள் எத்தனை நடந்தேறி உள்ளன என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-இல் 6 வயது சிறுவன் மாயி, ஆண்டிபட்டி அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். 30 மணி நேரம் போராடியும் சிறுவனை காப்பாற்ற முடியாததால் அச்சிறுவன் உயிரிழந்தான். இதே ஆண்டு ஆகஸ்ட் 27-ல் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்தான்.
2011 செப்டம்பர் 8ம் தேதி நெல்லை மாவட்டம் கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுதர்ஷன் உயிரிழந்தான். 2012 அக்டோபர் 1-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே 50 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் குணா, பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான்.
2013 ஏப்ரல் 28ம் தேதி கரூர் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி, சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதே ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமி தேவி 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து வேலூர் மாவட்ட பூலாம்பாடி கிராமத்தில், இரண்டரை வயது சிறுவன் தமிழரசன் 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு ஏபரல் மாதம் நடந்த இச்சம்பவத்தில், 9 மணி நேரத்திற்குப்பின் மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர். 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாகை மாவட்டம் புதுப்பள்ளியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி சிவதர்ஷினி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார். நீண்ட நேர போராடிய மீட்புப் படையினர், சிறுமியை பத்திரமாக மீட்டனர்.