ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அன்வர்திகன்பேட்டை ரயில் நிலையம் அருகே ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயிலை மறித்து, மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்க வலியுறுத்தி ரயில் பயணிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு கடுமையான முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் விமானம், ரயில், மற்றும் பேருந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா தாக்கம் குறைந்த காரணத்தால் சிறிது சிறிதாக தளர்வுகளை அரசு அறிவித்தது.
இதையடுத்து ரயில்வே நிர்வாகம் படிப்படியாக ரயில் சேவையை துவங்கியது. இந்த ரயில் சேவையில் விரைவு ரயில்களில் அவசர தேவைகளுக்கும், பணிகளுக்குச் செல்லும் பயணிகள் டிக்கெட் எடுத்து செல்லும் வகையில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் மூலமாகச் சென்று வந்தனர். இந்நிலையில், அரக்கோணம் மற்றும் காட்பாடி பகுதியில் இருந்து நாள்தோறும் சென்னைக்கு லட்சக்கணக்கானோர் ரயிலில் வேலைக்காகச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ரயில்களில் முன்பதிவு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்க வலியுறுத்தி, அன்வர்திகன்பேட்டை ரயில் நிலையத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயிலை மறித்து நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.