கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகர் கருணாபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற விஷச் சாராய சம்பவத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள், இதற்கென அமைக்கப்பட்ட சிபிசிஐடி போலீசார் என பல்வேறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இவர்களைத் தவிர எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கள்ளக்குறிச்சிக்குச் சென்ற உயிரிழந்த உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.
அந்த வகையில், கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுப்பது தவறானது. நிதி கொடுப்பது கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பதுபோல இருக்கிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமே தவிர, அதை அருந்தியவர்களுக்கு நிதி தரக்கூடாது” என்றார்.
கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கள்ளச் சாராயமும் திமுகவும் பின்னிப்பிணைந்துள்ளன. விஷச் சாராய உயிரிழப்பு விவகாரத்தில் மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். விஷச் சாராய உயிரிழப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னிடம் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவ பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
அதுபோல், சசிகலாவும் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ”கள்ளச்சாராய விற்பனைக்கு காவல்துறை உடந்தை. கள்ளச்சாராய உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியவேண்டும். சம்பந்தப்பட்டவர்களை ஒருவாரத்திற்குள் கைது செய்ய வேண்டும்.
அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யக்கூடாது சஸ்பெண்ட் செய்ய வேண்டும். தமிழகத்தில் இனி இதுபோன்ற சம்பவம் நடக்கவே கூடாது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: முதல் தென்கிழக்கு ஆசிய நாடு| தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளித்தது தாய்லாந்து!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “70க்கும் மேல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கைதானவர் தொடர்ந்து சாராயம் விற்றது எப்படி? காவல் துறையை நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர், கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க வேண்டும். கள்ளச் சாராய விற்பனையில் திமுகவினரின் ஆதிக்கத்தால்தான் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இனியாவது இதுபோன்ற மதுவினால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க நடவடிக்கை தேவை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார்.