கட்சியைத் தொடங்கிவிட்டு ‘அண்ணாத்த’ பட ஷூட்டிங்கிற்கு போகிறவருக்கு மக்கள் ஓட்டு போடுவார்களா என ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியது குறித்து அவரது ரசிகர்கள் பலர் மகிழ்ச்சியில் உள்ள நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சிலர் அவரை விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியதைப் பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ‘’அரசியல் என்பது ஒரு தீவிரமான விஷயம். இன்று அனைத்து கட்சி தலைவர்களும் வேறுபாடு இல்லாமல் களத்தில் நின்று மக்கள் பிரச்னைகளுக்காக போராடி வருகின்றனர். மக்கள் குறைகளைக் கேட்டு சேவை மனப்பான்மையுடன் செய்யவேண்டிய ஒரு விஷயம் அரசியல். உலகத்தில் எந்த அரசியல் கட்சி தலைவராவது கட்சி தொடங்கிவிட்டு 40 நாட்கள் ஷூட்டிங்கிற்கு செல்வார்களா? நான் ‘அண்ணாத்த’ ஷூட்டிங்கிற்கு செல்கிறேன் என்பவரை நம்பி மக்கள் ஓட்டு போடுவார்களா? இது பேசவேண்டிய விஷயமே அல்ல’’ என்று விமர்சித்துள்ளார்.