மனநிலை பாதிக்கப்பட்ட மகனுடன் 65 நாள்களாகச் சாலையில் தவிக்கும் பெற்றோர் - ஊரடங்கு கொடுமை

மனநிலை பாதிக்கப்பட்ட மகனுடன் 65 நாள்களாகச் சாலையில் தவிக்கும் பெற்றோர் - ஊரடங்கு கொடுமை
மனநிலை பாதிக்கப்பட்ட மகனுடன் 65 நாள்களாகச் சாலையில் தவிக்கும் பெற்றோர் - ஊரடங்கு கொடுமை
Published on

மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரோடு பேருந்து நிழற்குடையில் கடந்த 65 நாள்களாகத் தங்கியிருக்கும் தம்பதியினரின் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (80). இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு பாலாஜி என்ற ஒரு மகன் உள்ளார். 80 வயதான செல்வராஜ் கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2008 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த பாலாஜிக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து பாலாஜியின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக அவரை பல ஊர்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த வகையில் நண்பர் ஒருவரின் பரிந்துரையின் படி கடந்த பிப்ரவரி மாதம் பாலாஜியை ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு பொது மருத்துவ மனைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு அவரை அனுமதித்த மருத்துவர்கள் கடந்த 25 நாள்களாகச் சிகிச்சை அளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி பாலாஜிக்குச் சிகிச்சை முடிவடைந்ததால் அவர்களை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்தச் சமயத்தில் நாடு முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருப்பினும் அப்பகுதியிலிருந்த ஒரு ஆட்டோவை அழைத்து காவல் கிணறு நோக்கி வந்துள்ளனர்.

அங்கிருந்த செக்போஸ்ட் முன்பு அவர்களை ஆட்டோ ஓட்டுநர் இறக்கி விட்டுச்சென்றுள்ளார். இதனையடுத்து காவல் கிணறு பகுதியில் உள்ள கடைகளின் முன்பு இரண்டு நாள்கள் படுத்து உறங்கி உள்ளனர் .பின்பு அங்கிருந்து ஒரு ஆட்டோவில் பணகுடி வந்து அங்குள்ள பேருந்து நிலையத்தின் நிழற்குடையில் கடந்த 65 நாள்களாக வெயிலிலும், மழையிலும் தங்கி வருகின்றனர். இவர்களுக்கு பணகுடி பேரூராட்சியின் மூலமாகத் தினசரி ஒரு உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அவர்கள் கூறும் போது “மனநிலை பாதிக்கப்பட்ட பாலாஜி திடீரென இரவு எழுந்து சென்று விடுகிறார். ஆகவே எங்களால் நிம்மதியாக உறங்கக் கூட முடியவில்லை. எங்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை. பாலாஜிக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரைகள் அனைத்தும் காலியாகிவிட்டது. மீண்டும் மனநிலை பாதிக்கப்பட்ட பாலாஜியை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கும் வழி இல்லை. எப்போது இந்த ஊரடங்கு முடிந்து, பேருந்துகள் இயக்கப்படுமோ. நாங்கள் சிதம்பரம் செல்ல அரசுதான் உதவி செய்ய வேண்டும்” என வேதனைப் பொங்கக் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com