செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் குமார். மதுரை பேரையூரை சேர்ந்த வீர செல்வி என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். பட்டதாரியான செந்தில் குமார் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் வீர செல்விக்கும் ஆசிரியர் பணி கிடைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை அனுப்பானடி பாபுநகர் 4 வது தெரு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். இதையடுத்து செந்தில் குமார் சில வருடங்களாக வேலைக்குச் செல்லமால் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அவ்வபோது வீர செல்வியின் பணத்தை எடுத்துச் சென்று மது அருந்துவதோடு தவறான செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செந்தில் குமார் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் செந்தில் குமாரின் மனைவியிடம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலயே செந்தில் குமாரின் மனைவி வீர லெட்சுமி மற்றும் மகள்களான தனுஸ்ரீ (13), மேகா ஸ்ரீ (8) ஆகிய மூன்று பேரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெப்பக்குளம் காவல்துறையினர் மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தெப்பக்குளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் - மனைவி 2 பெண் குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.