’3 மகன்களும் இருந்தும் கவனிக்கவில்லை’ : வறுமையால் வயதான தம்பதியின் சோக முடிவு..!

’3 மகன்களும் இருந்தும் கவனிக்கவில்லை’ : வறுமையால் வயதான தம்பதியின் சோக முடிவு..!

’3 மகன்களும் இருந்தும் கவனிக்கவில்லை’ : வறுமையால் வயதான தம்பதியின் சோக முடிவு..!
Published on

சென்னையில் 3 மகன்கள் இருந்தும் கவனிக்க யாருமில்லை என வயதான தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசித்த மூத்த தம்பதியினர் குணசேகரன்-செல்வி. இவர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு செம்பியம் போலீசார் அவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 60 வயதிற்கும் மேலான குணசேகரனும், செல்வியும் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என செம்பியம் போலீசார் ஆய்வு மேற்கொண்டுபோது, தற்கொலைக்கு முன்னர் அவர்கள் உருக்கமாக எழுதிய கடிதம் கிடைத்தது.

அதனை படித்ததும் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தது மட்டுமல்லாமல், வேதனையும் அடைந்தனர். அதில், "எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் உடலை காவல்துறையினர் தான் அடக்கம் செய்யவேண்டும். மகன்கள் கொல்லிவைக்க கூடாது" என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. தற்கொலை செய்து கொண்ட குணசேகரன்-செல்விக்கு 3 மகன்கள். 60 வயதிலும் குணசேகரன் கார்பென்டராக வேலை செய்து வந்தார். கொரோனா காரணமாக கார்பென்டர் வேலை வராததால் தனியார் நிறுவன காவலாளி வேலைக்கு சென்று வந்தார். இவர்களின் முதல் இரண்டு மகன்களும் திருமணமானபின் தாய் தந்தையரைப் பிரிந்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர்.

மூன்றாவது மகன் ஸ்ரீதருக்கு திருமணமாகவில்லை. இவர் மட்டும் பெற்றோருடன் வசித்தார். இவர் மதுவுக்கு அடிமையானதால் ஒழுங்காக வேலைக்கு செல்லவில்லை. பெற்றோரையும் கவனிக்கவில்லை. கொரோனா ஊரடங்கால் குணசேகரன் பார்த்துவந்த செக்யூரிட்டி வேலையும் தற்போது இல்லை. இதனால் போதிய வருமானமில்லாமல் வறுமையால் இருவரும் வாடினர். ஆனால் 3 மகன்களும் தாய் - தந்தையரை கண்டுகொள்ளால் கல்நெஞ்சம் உடையவர்கள் போல இருந்ததாக தெரிகிறது. இது வயதான தம்பதியினருக்கு மேலும் மனவேதனை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், கண்ணீரையும் வரவழைத்து உள்ளது. 3 மகன்களும் செம்பியம் போலீசாரிடம் பெற்றோரின் இறுதி சடங்கினை தாங்களே செய்வதாக கூறிய பிறகு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி போலீசார் உடலை அவர்களிடமே ஒப்படைத்தனர். தற்கொலை கடிதத்தில் கூட தன் மகன்களுக்கு பிரச்சினை வரக்கூடாது என தங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என பெற்ற பாசத்தை வார்த்தைகளில் அவர்கள் காட்டி விட்டு சென்றுள்ளனர். 3 மகன்களை பெற்றாலும், கடைசியில் ஒருவர் கூட குணசேகரன்-செல்வியை பார்க்கவில்லை என்று கண்ணீரோடு தெரு மக்கள் கூறியது அனைவரையும் கலங்கச் செய்தது.

தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வல்ல. எனவே தற்கொலை எண்ணம் தோன்றினால் கீழ்க்கண்ட நிறுவனத்திற்கு தொடர்பு கொள்ளவும்..

சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com