பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைய உள்ள பகுதிகள், மாண்டஸ் புயலால் நீர் பரப்பாக மாறியுள்ளது.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையமாக பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசால் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துரை அடுத்துள்ள 4563 ஏக்கர் நிலப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிங்கிலி பாடி, மாடபுரம், பரந்தூர், வளத்தூர், நெல்வாய், மகாதேவி மங்களம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதில், 3246 ஏக்கர் தனியார் நிலமும் 1542 ஏக்கர் அரசு நிலமும் அடங்கும். அரசு நிலமான 1542 ஏக்கரில் 955 ஏக்கர் நீர் நிலைகளாகவும் மீதமுள்ள 361 ஏக்கர் மேய்ச்சல் நிலம் மற்றும் தரிசு நிலமாகவும் உள்ளது. இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால், பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
குறிப்பாக பரந்தூர் ஏரி, நாகப்பட்டு ஏரி, ஏகனாபுரம் ஏரி, நெல்வாய், மாடபுரம், மகாதேவி மங்கலம் என 11 நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் உபரி நீர் சாலைகளிலும் வயல் வெளிகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த திட்டத்தின் படி மொத்த நீர் நிலைகளின் பரப்பு 1542 ஏக்கர், அதில் 587 ஏக்கர் நிலப் பகுதியில் உள்ள நீர்நிலைகள் அப்படியே பராமரிக்கப்படும். மீதமுள்ள 955 ஏக்கர் விமான நிலைய கட்டுமான பகுதியாக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், 1458 ஏக்கர் அளவிற்கு ஆயக்கட்டு நிலங்கள் இவற்றில் அடங்குகிறது. இந்த ஆயக்காடுகளில் உள்ள மணல் களிமண்ணாக இருப்பதால் பெய்யும் மழை நீர் குறைந்தபட்சம் 20 நாள் வரை தேங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 60 சதவீத நிலங்கள் விவசாய நிலங்களாகவும், 30 சதவீதம் நீர் நிலைகளாகவும், 10 சதவீதம் தரிசு நிலங்களாகவும் இருக்கிறது. இந்நிலையில், நவம்பர், டிசம்பர் மழைக் காலங்களில் பரந்தூர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்புவதும் அவை கொசஸ்தலை ஆற்றின் வடிகால அமைப்பில் அமைந்துள்ளதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (டிட்கோ) விரிவான தொழில்நுட்ப - பொருளாதார அறிக்கையை (டிடிஆர்) தயாரிப்பதற்காக, சர்வதேச போட்டி ஏலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், விமான நிலையம் தொடர்பான சமூகப் பொருளாதார மற்றும் நிலப்பகுதி ஆய்வுகள் குறித்தான ஆலோசனை கூட்டம் வரும் மாதத்தில் நடத்த டிட்கோ திட்டமிட்டுள்ளது. அதில், விமான நிலையம் கட்டுமான பணிகளுக்கு விண்ணப்பித்திருக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரிக்குள் டெண்டர் பணிகள் முடிவடைந்து விமான நிலையம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்குவதற்கான பணிகளை டிட்கோ எடுத்துள்ள நிலையில், மாண்டஸ் புயலால் பரந்தூர் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
அடையாறு நீர் பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள சென்னை விமான நிலையம் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. இரண்டு நாட்களுக்கு மேல் விமான சேவைகள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் புதிதாக பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு முன்பு நமது முந்தைய கால அனுபவங்களையும், சுற்றுச்சூழலுக்கும் பேரிடரை எதிர்கொள்ளும் வகையிலும் அமைக்க வேண்டியதன் அவசியத்தை அரசு உணர வேண்டும் என பரந்தூர் விவசாயிகள் தெரிவித்தனர்.
விமான நிலையம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையும், திட்ட அறிக்கையையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. நீர்நிலைகள் இல்லாத தரிசு நிலங்களை தேர்ந்தெடுத்து விமான நிலையம் அமைப்பது தான் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், பேரிடர் காலங்களில் விமான நிலையத்தை தொடர்ச்சியாக பயன்படுத்துவதற்கான தொலைநோக்கு திட்டமாகவும் இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்தனர்.