சென்னை விமான நிலையத்திற்கு நாள்தோறும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் வந்து செல்வதன் காரணமாக சென்னை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் சென்னைக்கு 2/வது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “புதிதாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்திற்கும், அரக்கோணம் மற்றும் காஞ்சிபுரம் இடையே புறநகர் ரயில் போக்குவரத்து ஏற்படுத்துவதற்கான வசதிகள் பிற்காலங்களில் ஏற்படுத்தப்படும். பிற்காலங்களில் புதிய விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில் வசதிகளும் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது
இந்த விமான நிலையம் அமையும்பட்சத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இரண்டாவது தொழில் புரட்சி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மேலும் வளர்ச்சி அடைய இவ்விமான நிலையம் உதவும். இந்த புதிய விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் வசதியும் இரண்டு ஓடுதளங்களும், விமானங்களில் கோளாறு ஏற்பட்டால் சரி செய்யும் தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட கேந்திரமும் அமைக்கப்பட உள்ளது.
தற்போது செயல்பட்டு வரும் திரிசூலம் விமான நிலையத்திற்கும் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்திற்கும் இடையே போக்குவரத்து மேம்படுத்துவதற்கு புதிய போக்குவரத்து வழித்தடம் (Corridor) ஏற்படுத்தப்படும். தற்போது நான்காயிரம் ஏக்கர் நிலம் தயாராக உள்ளது. இன்னமும் ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. எந்த இடத்தில் குறிப்பாக விமான நிலையம் அமைய உள்ளது என்ற தகவலை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து உறுதிப்படுத்துவார்கள். இதுதவிர கரூர் மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.