சசிகலாவுக்கு அம்மா; ஓ.பி.எஸ்க்கு புரட்சி தலைவி அம்மா
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், போட்டியிடும் சசிகலா தரப்புக்கும், ஓ.பி.எஸ் தரப்புக்கும் தேர்தல் ஆணையம் சின்னமும் கட்சியின் பெயரையும் ஒதுக்கியுள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பும் உரிமை கோரியதால், அந்த சின்னத்தை முடக்கி தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. மேலும், அஇஅதிமுக என்ற கட்சியின் பெயரையும், இருதரப்பும் பயன்படுத்த கூடாது என்றும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை, இரண்டு தரப்பும், புதிய சின்னங்களை பெற முனைப்புக் காட்டின. இந்த சூழலில் சசிகலா தரப்பிற்கு முதலில் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. சசிகலா தரப்பு அதை ஏற்க மறுத்ததால் தொப்பிச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு, மின்கம்பம் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. மின்கம்பம் சின்னம், இரட்டை இலை போல் இருப்பதால், இரண்டு அணிகளும் அந்த சின்னத்தை பெற கடுமையாக போட்டி போட்டன. கடைசியில் ஓபிஎஸ் அணி மின்கம்பத்தைப் பெற்றது.
அதிமுக என்ற கட்சியின் பெயரைப் பயன்படுத்த முடியாததால் இரண்டு அணிகளும் புதிய கட்சிப் பெயர்களில் இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றன. சசிகலா தரப்பினர் அஇஅதிமுக அம்மா என்ற பெயரிலும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அஇஅதிமுக புரட்சி தலைவி அம்மா என்ற பெயரிலும் தேர்தலைச் சந்திக்கின்றனர்.