பண மதிப்பிழப்பா? பண மதிப்புக் குறைப்பா? குழம்பிய தேர்வாணையம்! அதிருப்தியடைந்த நீதிமன்றம்

பண மதிப்பிழப்பா? பண மதிப்புக் குறைப்பா? குழம்பிய தேர்வாணையம்! அதிருப்தியடைந்த நீதிமன்றம்
பண மதிப்பிழப்பா? பண மதிப்புக் குறைப்பா? குழம்பிய தேர்வாணையம்! அதிருப்தியடைந்த நீதிமன்றம்
Published on

பண மதிப்புக் குறைப்பும், பண மதிப்பிழப்பும் வெவ்வேறானவை என்பதால், எஸ்.ஐ. தேர்வில் இடம் பெற்ற ஒரு கேள்விக்கு 0.5 மதிப்பெண் வழங்க, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

முன்னதாக அபினேஷ் மற்றும் கே.ராஜ்குமார் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘’தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில்,  எஸ்.ஐ. பணிக்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஜனவரி 12-ம் தேதி நடந்தது. இத்தேர்வில் கேள்வி எண்  47ல் இந்தியாவில், 1947க்குப் பின் எத்தனை முறை பண மதிப்பு குறைப்பு செய்யப்பட்டது எனக் கேட்கப்பட்டது. அதற்கு, மூன்று முறை என விடையளித்தோம்.

'கீ' பதில்களில், நான்கு முறை என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவில் எங்களுக்கு 48 மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. 48.5 மதிப்பெண் பெற்றிருந்தால், அடுத்தகட்ட தேர்விற்கு அழைக்கப்பட்டிருப்போம்.

ஒரு நாட்டின் மைய வங்கி, அந்நாட்டின் பணத்தை, மற்ற நாடுகளின் பண மதிப்பு அடிப்படையில் தானாக முன்வந்து குறைத்து நிர்ணயிப்பது, பண மதிப்பு குறைப்பு. அதன்படி, இந்தியாவில் பண மதிப்புக் குறைப்பு, 1949, 1966 மற்றும் 1991ல் செய்யப்பட்டது. இது, பிளஸ் 2 பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

பண மதிப்பிழப்பானது குறிப்பிட்ட நாணயங்களின் மதிப்பை சட்டப்பூர்வமாக செல்லாது என அறிவிப்பது. இதன்படி, 2016ல் அப்போதைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

இதை தவறாக புரிந்துகொண்டு, பண மதிப்புக் குறைப்பு, நான்கு முறை மேற்கொள்ளப்பட்டதாக, 'கீ' பதில்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களுக்கு அக்கேள்விக்குரிய மதிப்பெண் வழங்க வேண்டும். அடுத்தகட்ட தேர்வில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று  இரு மனுதாரர்களும் கோரியிருந்தனர். இதையடுத்து சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி சி.சரவணன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பண மதிப்புக் குறைப்பு மற்றும் பண மதிப்பிழப்பு ஆகிய இரு சொற்களையும் வேறுபடுத்துவதில் நிபுணர் குழு தவறிவிட்டதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் இரு மனுதாரர்களுக்கும் 0.5 மதிப்பெண் வழங்குமாறு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com