தமிழகம் தொழில் துறைக்கு சாதகமான மாநிலமாகத் திகழ்வதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் இந்தியா டுடே மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றியபோது அவர் இதைத் தெரிவித்தார். டெல்லிக்கு வெளியே இதுபோன்ற வடஇந்திய ஊடக குழுமத்தின் மாநாடு முதல்முறையாக நடைபெறுவதாக கூறிய அவர், சென்னையில் மாநாடு நடைபெறுவது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதாக உள்ளது என்றார்.
நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் விளங்குவதாகக் கூறிய பன்னீர்செல்வம், தேசிய அளவில் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் அதிகரித்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார். சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளதாக கூறிய முதலமைச்சர், கட்டமைப்புத் துறையில் தமிழகம் அதிக முதலீடுகளைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டிலேயே அதிக அளவில் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடம் வகிப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் பல தொழிற் சாலைகளை அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார். தொழில் துறையில் அதிக வேலைவாய்ப்பைத் தரும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாகவும், சேவைத் துறையில் தமிழகம் நாட்டிலேயே முக்கிய இடம் வகிப்பதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாக தமிழகம் இருப்பதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்ததைச் சுட்டிக் காட்டிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.