செய்தியாளர்: இரா.சரவணபாபு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சிக்காரம்பாளையம் கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள கண்ணார்பாளையம் அரசு ஆரம்ப மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஏழ்மை நிலையில் உள்ள கிராமப்புற மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் ஊரை விட்டு வெளியில் அதிகம் செல்லாதவர்கள். இவர்களுக்கு விமானம் என்பது வானில் பறந்து செல்லும்போது வேடிக்கை பார்க்கும் பொருள் மட்டுமே.
இந்நிலையில், இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரை சிக்காரம்பாளையம் ஊராட்சித் தலைவர் ஞானசேரகன் கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் இன்று காலை அழைத்துச் சென்றார்.
சென்னையில் காலை உணவுக்கு பின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அண்ணா நூலகம் மற்றும் அறிவியல் கோளரங்கம் உள்ளிட்ட பயனுள்ள பகுதிகளுக்கும் சுற்றுலா அழைத்துச் சென்று சுற்றிக் காண்பிக்க உள்ளனர்.
75 மாணவ மாணவியர் மற்றும் அவர்களுடன் தலா ஒருவர் வீதம் 75 பேர். இவர்களை வழிநடத்த 15 ஆசிரியர்கள் என மொத்தம் 165 பேர் விமானத்தில் சென்றுள்ளனர். ஏழை கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமான ஊராட்சித் தலைவரின் இச்செயல் இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.