தேர்தலில் தனக்கு வாக்களிக்காதவர்களின் வீடுகளை இடித்து பெண்கள், குழந்தைகளை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தும் கிராம ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே செம்பியேனந்தல் ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் இந்திரா அழகுமலை - பாண்டிஸ்வரி முத்துகுமார் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இதில் இந்திரா அழகுமலை வெற்றி பெற்று பதவியேற்ற நிலையில், அவரின் கணவர் மற்றும் உறவினர்கள் தனக்கு எதிராக தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் தனக்கு வாக்களிக்காத பொதுமக்கள் ஆகியோரது வீடுகளை இடித்து அங்குள்ள பெண்களை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக பத்து பேர் கொண்ட கும்பலை கைக்குள் வைத்துக் கொண்டு தினமும் ஊருக்குள் வந்து வாக்களிக்காதவர்களின் வீடுகளில் உள்ள பெண்களை அடித்து உதைப்பதாகவும், தாங்கள் வெற்றிபெற்று விட்டதால் வரப்போகும் ஐந்து ஆண்டுகளுக்கு மக்கள் தங்களுக்கு அடிமையாகதான் இருக்க வேண்டும் என்று மிரட்டடுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இது மட்டுமன்றி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மீது பொய் வழக்கு கொடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ஏற்பாடு செய்வதாகவும், வீட்டில் உள்ள குழந்தைகளை தூக்கி சென்று மிரட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி அவரின் கையை அந்தக் கும்பல் வெட்டியுள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து ஒத்தக்கடை காவல்நிலையத்தில் ஐந்து முறை புகார் அளித்த போதும், காவல்துறையினர் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக பேசுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் வேதனையடைந்த அக்கிராமத்தைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் வந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து தங்களை காப்பாற்றும் படி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.