பாம்பன் தென்கடல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த காலின்ஸ் என்பவருக்குச் சொந்தமான ரூ.90 லட்சம் மதிப்பிலான படகு இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. இது குறித்து படகு உரிமையாளர் மெரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மெரைன் போலீசார், படகிற்கு யாரும் தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததா என்று விசாரணை நடத்தினர்.
பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக படகு எரிந்தது என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், காற்றின் வேகத்தாலும் அதிகாலை விபத்து என்பதாலும் தீ உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவித்தனர். கடந்த ஒரு வாரமாக கரையில் நிறுத்தி பழுது நீக்கப்பட்டு மீன்பிடிக்கச் செல்ல தயாராக இருந்த நிலையில், நேற்றுதான் கடலில் இறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீயில் எரிந்து சேதமடைந்த படகுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என படகின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். கடலில் நிறுத்தி வைத்திருந்த விசைப்படகு திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பாம்பன் துறைமுக பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.