கர்நாடக மாநில நந்திதுர்கத்தில் தான் பாலாறு பிறக்கிறது. அம்மாநிலத்தில் 93 கி.மீ. பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ. கடந்து வந்து, தமிழகத்தில் அதிகப்படியாக 222 கி.மீ. என மொத்தமாக 348 கி.மீ. தூரம் தடம் பதிக்கிறது பாலாறு. இறுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பாலாற்றினால் தமிழகத்தில் 32 ஆயிரத்து 746 ஹெக்டேர் நிலங்கள் பயனடைகின்றன. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மட்டும் 150 ஏரிகள் பாலாற்றின் மூலம் நீர் பெற்று அவற்றின் கீழ் 15 ஆயிரத்து 409 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
முன்பு தஞ்சைக்கு அடுத்த மிகப்பெரிய நெற்களஞ்சியம்:
பாலாற்றுக்குத் துணை நதிகளாக மலட்டாறு, அகரம் ஆறு, கவுண்டியா ஆறு , பொன்னை, சேயாறு ஆகிய ஆறுகள் உள்ளன. பாலாற்றில் மொத்தம் 606 ஆற்றுக் கால்வாய்கள் இருந்ததாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன தமிழகத்தின் நெற்கஞ்சியமான தஞ்சைக்கு அடுத்தபடியாக வட ஆற்காடு பகுதிதான் (ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டம்) அதிக அளவில் நெற்பயிரிடும் பகுதியாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் பாலாறுதான்.
கழிவுநீர் ஆறாகும் பாலாறு:
இப்படி வரலாறு படைத்த இந்த பாலாற்றில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகள், ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் மற்றும் பாலாறு படுக்கையில் உள்ள கிராம ஊராட்சிகளில் இருந்து நேரடியாக கழிவுநீர் பாலாற்றில் விடப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்கள், இறைச்சி கழிவுகள், தோல் கழிவுகள் (உயிரிழக்கும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும்) மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுகள், கட்டுமான பொருட்களின் கழிவுகள் என பாலாற்றில் கொண்டு வந்து நேரடியாக கொட்டி செல்கின்றனர். மேலும் கொட்டி செல்வதோடு அதை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் புகையால் காற்று மாசும் ஏற்படுகிறது.
வரும் கொஞ்ச நீரிலும் விவசாயம் செய்ய இயலவில்லை:
ஆந்திரா அரசு தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்கள் எதிர்ப்பை கடந்து பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை கட்டியுள்ளனர். இதனால் பாலாற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது, இருப்பினும் அதையும் தாண்டி பாலாற்றில் தமிழக விவசாயிகளுக்காக ஆர்ப்பரித்து வரக்கூடிய கொஞ்சம் தண்ணீரில் இதுபோன்ற பொருட்கள் கொட்டி, தீயிட்டு கொளுத்துவதால் பாலாறு முற்றிலும் மாசடைகிறது. இதனால் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
இது குறித்து பேசிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு குழுவினர், “கடந்த 1991 ஆம் ஆண்டு இந்த விஷயம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1996 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஜீவ ஆதாரமாக உள்ள பாலாற்றில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என யாரும் கழிவு நீரை சுத்திகரிக்கப்படாமல் விடக்கூடாது எனவும் பாலாற்று தாயை பாதுகாக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.
ஆனால் இதை யாருமே பின்பற்றாமல் தற்போது 25 ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் மற்றும் மாசடையும் பொருட்களை பாலாற்றில் கொட்டி வருகின்றனர். உடனடியாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை பின்பற்றி அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். அரசு சீரிய முறையில் நடவடிக்கை எடுத்து பாலாற்றை பாழாகாத ஆறாக பயணிக்கச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.