தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் யுமாஜின் டிஎன் என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை விரைவு படுத்துதல் என்ற கருப்பொருளை கொண்டு 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 120 தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐ.டி.துறையின் தமிழின் பாய்ச்சல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கியது என பெருமிதம் தெரிவித்தார். உலகின் மனிதவள மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
2 ஆண்டுகளில் நிதியமைச்சராக மிகச்சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு பழனிவேல் தியாகராஜன் வித்திட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நிதித்துறை போல் ஐ.டி. துறையிலும் மாற்றம் தேவைப்பட்டதாலேயே அவரை துறை மாற்றியதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு உயரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக, அனைத்து மாநகராட்சிகளிலும் ஆயிரம் இடங்களில் வைஃபை சேவை வழங்கப்படும் என அண்மையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக சென்னையில் 500 இடங்களில் வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.