பழனி முருகன் கோயிலில் கடந்த 22 நாட்களாக பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரொக்கமாக ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றுபடை வீடான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலை மீதும் மலை அடிவாரத்திலும் கோயில் நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை செலுத்திவிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் கார்த்திகை மாதம் பிறந்ததில் இருந்து ஜயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றுவிட்டு பழனி முருகன் கோயிலுக்கும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். கடந்த 22 நாட்களாக பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மலை மீதுள்ள கார்த்திகை மண்டபத்தில் வைத்து கோயில் ஊழியர்களால் எண்ணப்பட்டது.
ரொக்கமாக ஒரு கோடியே 82 லட்சத்து நான்கு ஆயிரத்து 851 ரூபாயும், தங்கமாக 765 கிராம், வெள்ளி பொருட்களாக 6,950 கிராம், 1468 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளது.