ரூ.1.5 கோடி குடும்பச் சொத்துக்காக அடித்துக்கொண்ட அக்கா, தம்பி! பழனியில் பரபரப்பு! பின்னணி என்ன?
பழனி திண்டுக்கல் சாலையில் சிவகிரிபட்டி என்ற இடத்தில் காளிமுத்து மற்றும் சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான வீடு மற்றும் கடை உள்ளது. காளிமுத்து மற்றும் சுப்பிரமணி இருவருமே சில ஆண்டுகளுக்கு முன்பாக மரணமடைந்த நிலையில், அவரது வாரிசுகள் இடையே சொத்தைப் பகிர்ந்துகொள்வதில் பிரச்னை இருந்துவந்துள்ளது. திண்டுக்கல் சாலையில் உள்ள சுமார் ரூ.1.5 கோடி மதிப்பு உடைய சொத்தைப் பிரிப்பது சம்பந்தமாக நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காளிமுத்து மகன் பிரதீப் நடத்தி வந்த கடையை சித்தப்பா மகள்கள் வாசுகி மற்றும் சுசீலா ஆகியோர் சேர்ந்து இரவு நேரத்தில் அடியாட்களை வைத்துப் பூட்டியுள்ளனர். தகவல் அறிந்து பிரதீப் தனது சகோதரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படாத நிலையில், கடையைத் திறக்கச் சென்றபோது பெண்கள் இருவரும் சேர்ந்து தனது சகோதரனான பிரதீப்பைத் தாக்கியுள்ளனர்.
தகராறு நடைபெறுவதை அறிந்து அந்தப் பகுதியில் பொதுமக்கள் கூடியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். குடும்பச் சொத்துக்காக சகோதர, சகோதரிகள் அடித்துக்கொண்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.