பழனி தாலுகா அலுவலகத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு எந்த பதிலும் இல்லை எனக்கூறி, தாலுகா அலுவலக வளாகத்துக்கு வெளியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் அரசு சார்பில் உதவித்தொகையை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சமூக நலத்துறை மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகள் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், பழனி தாலுகா அலுவலகத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு எந்த பதிலும் இல்லை என்று உதவி பெறும் மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளின் அலட்சியப்போக்கை கண்டித்து, இன்றைய தினம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நூருல்ஹூதா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், "புதிதாக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் மனுக்களை பல்வேறு காரணங்கள் கூறி நிராகரித்து வருகின்றனர். 10 மாதங்களுக்கு முன் விண்ணப்பித்த மனுக்களுக்கு இன்னும் உதவி தொகை வழங்காமல் கால நீட்டிப்பு செய்து வருகின்றனர். சில நேரங்களில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இப்படி நீண்ட நாட்களாக மாற்றுதிறனாளிகளுக்கு நிறுத்தி வைக்கபட்ட உதவி தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். புதிதாக வழங்கபட்ட விண்ணப்பங்களை ஒரு மாதத்தில் விசாரணை செய்யபட்டு அதற்கான விளக்கத்தை தாலுகா அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகை மூலமாக தெரிவிக்க வேண்டும்" என்றனர்.
தகவலறிந்த உதவி தாசில்தார் செந்தில் மற்றும் பழனி டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பழனி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.