உலகப்புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
ஜல்லிக்கட்டு தடை நீங்கியதால் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 850 காளைகள் மற்றும் 1,067 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒட்டி 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் முழுவதும் சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்பட இருக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு 200 மாடுபிடி வீரர்கள் என சுழற்சி முறையில் வீரர்கள் களமிறங்க உள்ளனர். போட்டியின் முடிவில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு வழங்கப்படுவதற்காக மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்கள், தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன.