சென்னை புழல் சிறையில் பாகிஸ்தான் உளவாளிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுந்த புகார், 10 மாதங்களுக்குப் பின் வெளியாகியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்தவர் முகமது ஜாகிர் உசேன். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உளவாளியான இவர், இலங்கை பாகிஸ்தான் தூதர்கள் துாண்டுதலின் பேரில் சென்னையில் வேவு பார்த்ததாக அவரை காவல்துறையினர் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பினர், ஜாகிர் உசேனுடன் சேர்ந்து மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாகிர் உசேன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு தண்டனைக்காலம் குறைக்கப்பட்டு சிறையில் அவருக்கு சலுகைகள் வழங்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் அவருக்கு மிரட்டல்கள் வந்ததையடுத்து கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். கடலுார் சிறையிலும் சிறையை தகர்த்து ஜாகிர் உசேனை கடத்திச் செல்வோம் என மிரட்டல் வந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து புழல் சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தபோது, தனது செல்லுக்கு நேரடியாக வந்த இரண்டு பேர் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக ஜாகிர் உசேன் 5 பக்கத்துக்கு சிறைத்துறை இயக்குநருக்கு கடந்த மார்ச் மாதம் கடிதம் எழுதியுள்ளார்.
சிறைத்துறை இயக்குநர் அசுதோஷ் சுக்லா மற்றும் எஸ்பி ஆகியோருக்கு ஜாகிர் உசேன் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது குறித்து சிறைத்தரப்பில் தெரிவித்ததாவது, ''சென்னை புழல் சிறையில் உயர்மட்ட பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருந்த தன்னை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான மதன் மற்றும் விகாஷ், ரூபன் ஆகியோர் நேரடியாக வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதியன்று மாலை 5.25 மணிக்கு வந்த அவர்கள் தம்மையும், தம் மனைவி, தாய், குழந்தைகளை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் தனக்கும், தமது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை என்றும், அந்த புகார் மனுவில் ஜாகிர் உசேன் கூறியுள்ளார்.
மேலும், தமிழக சிறைத்துறை அதிகாரகள், ஐஎஸ்ஐ உளவு அமைப்பினருடன் சேர்ந்து தம்மை கொலை செய்து விடுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஜாகிர் உசேனை மிரட்டிய நபர்கள், சமீபத்தில் சிறைகள் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக வெளியான புகைப்படங்களில் அவர்கள் படமும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா, இது 10 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்றும், ஜாகிர் உசேன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறியுள்லர். தற்போது ஜாகிர் உசேன் கடலூர் சிறையில் உள்ளார்.