ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழியில் நெல் உமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக முதல் கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து 7 மாத காலமாக நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் 3 பகுதிகளில் 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. அந்த குழிகளில் இருந்து 3000 ஆண்டுகள் முதல் 2500 ஆண்டுகள் வரையிலான 62 மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள், மணிகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பெரிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. அதனைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட கலையங்கள் மற்றும் பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் அருகே வாள் போன்ற இரும்பு பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பெரிய முதுமக்கள் தாழியில் இருந்து நெல் உமிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதிக அளவில் இந்த நெல் உமிகள் இருந்தது.