செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கக் கோரி, இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் தலைவரும் பெரம்பலூர் எம்பியுமான பாரிவேந்தர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு பாரிவேந்தர் எம்பி கடிதம் எழுதியுள்ளார். அதில், ”சென்னை அருகே செங்கல்பட்டில் நூறு ஏக்கர் பரப்பளவில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் நிறுவப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் தடுப்பூசி தயாரிக்க வேண்டிய அவசியமும் அவசரமும் நிலவும் சூழலில், செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.