செய்தியாளர்: அன்பரசன்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராக இருந்த அஞ்சலையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கந்து வட்டி தொழில் செய்து வந்த அவர், கொலையாளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.
தலைமறைவாக இருக்கும் அஞ்சலை, தமிழ்நாடு - ஆந்திர எல்லையோர பகுதியில் பதுங்கியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகின்றனர். இது தொடர்பாக அவரது மருமகன் சந்திரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனிடையே, பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அஞ்சலை விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதுப்புது நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவருவது அதிர்ச்சியளிக்கிறது” என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சென்னையில் பாடகர் அறிவு பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறினார் அவர்.