அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் குவியும் நோயாளிகள் - நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்

அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் குவியும் நோயாளிகள் - நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்
அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் குவியும் நோயாளிகள் - நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்
Published on

கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தினந்தோறும் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பெரும்பாலும் நிரம்பி வருகிறது. 

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் குவிந்து வருகின்றன. அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தனித்த படுக்கைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆயிரத்து 618 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 104நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 551நோயாளிகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அதில் 93 பேருக்கு தீவிர ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நிலையிலும், 72பேர் அதிதீவிர ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது 514 படுக்கைகள் காலியாக உள்ள நிலையில், 25படுக்கைகள் மட்டுமே ஆக்சிஜன் வசதியுடன் காலியாக உள்ளன. தினசரி சுமார் 150பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். 500முதல் 700பேர் வரை சராசரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு புறநோயாளிகளாக இங்கு வருகின்றனர்.

கொரோனா 2ஆவது அலை போர்க்காலம் போல இருப்பதாகக் கூறுகின்றனர் இங்கு பணியாற்றும் மருத்துவர்கள். கொரோனா நோயாளிகள் தேவைப்பட்டால் மட்டும் மருத்துவமனைக்கு வருமாறும், இல்லை என்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் வைக்கின்றனர்.

கொரோனா தடுப்பு உடைகளை அணிந்து கொண்டு, கடும் சிரமத்திற்கு இடையே வேலை செய்து வரும் நிலையில், பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகக் கூறுகின்றனர் இங்கு பணிபுரியும் செவிலியர்கள்.

பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதே, இரவு பகலாக வேலை செய்து வரும் மருத்துவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்கின்றனர் மருத்துவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com