"அதிக திறமைகள் இருந்தும் நாடு உச்சத்தை அடையவில்லை" ஆளுநர் ரவி கவலை
நமது நாட்டில் அபரிமிதமான திறமைகள், வளங்கள் இருந்த போதிலும் நாம் தொட வேண்டிய உச்சத்தை அடைய முடியவில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆயிரத்து 234 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார். அதனைதொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், அடுத்த 25ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் நாடாக இருக்க வேண்டும் என்றார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் விழாவிற்கு வரவில்லை. தமிழக அரசு மற்றும் ஆளுநர் இடையிலான மோதல் போக்கு வலுத்து வருகிறது. நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு அரசு சில நாட்களுக்கு முன்பு தமிழ்புத்தாண்டையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தினை புறக்கணித்தது. திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் இந்த விருந்தினை புறக்கணித்தது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இந்த விருந்தில் பங்கேற்றன.