ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தியதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இதற்கான ஆதாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைதியான முறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை சமூக விரோதிகள் சிலர் திசை திருப்ப முயற்சித்தாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் ஐஸ்அவுஸ் காவல் நிலையம் மீது சமூக விரோதிகள் சிலர் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் மெரினாவை நோக்கி செல்ல முயற்சித்த போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். சமூக விரோதிகள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற பிரச்னைகளும் எழுப்பப்பட்டதாக கூறிய அவர், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் குளித்து விளக்கமளித்த போதும் போராட்டம் ஓயவில்லை என தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தியதாகவும், அதற்கான ஆதாரங்கள் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும் முதலமைச்சர் தெரிவித்தார்.