வாகன ஓட்டுநர்கள் நாளை முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் வைத்திருப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், எனவே உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், அவகாசத்தை நீடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாளை முதல் கட்டாயம் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.