தமிழகத்தில் இன்று முதல் வாகன ஓட்டிகள் தங்களின் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் எடுத்துச்செல்வது கட்டாயமாகியுள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கைகளில் வைத்திருப்பது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், சாலை விபத்துக்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்தவே இந்த புதிய உத்தரவை பிறப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 6 ம் தேதி, அதாவது இன்று முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. புதிய விதிமுறையை பின்பற்றாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.