தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறைந்து வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வது வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சமீபத்தில் தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், “தமிழகத்தை பொறுத்தவரை உடல் உறுப்பு தானம் செய்வதில் எந்த முறைகேடும் இல்லை. உடல் உறுப்பு தானத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு முதல் உரிமை அளிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து உடல் உறுப்பு தானம் பெறுவதற்கான நோயாளிகள் இல்லையெனில் மட்டுமே தனியாருக்கு உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படுகிறது’’ என தெரிவித்தார்.
ஆனால் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் கீழ்நோக்கி சென்று கொண்டிருப்பதாக 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வருடமும் உடல் உறுப்பு தானம் குறைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. புள்ளிவிவரத்தின்படி கடந்த 3 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் 2016ல் தனியார் மருத்துவமனையில் 158 உடல் உறுப்பு தானங்கள் செய்யப்பட்டுள்ளன. அது 2017ல் 131 ஆகவும், 2018ல் 113 ஆகவும் உள்ளது.
(தமிழகத்தின் ஆண்டுவாரியாக செய்யப்பட்ட உடல் உறுப்பு தானம்)
ஆண்டு | அரசு மருத்துவமனை | தனியார் மருத்துவமனை |
2008 | 0 | 7 |
2009 | 9 | 50 |
2010 | 29 | 58 |
2011 | 19 | 51 |
2012 | 19 | 64 |
2013 | 18 | 112 |
2014 | 19 | 116 |
2015 | 14 | 141 |
2016 | 27 | 158 |
2017 | 29 | 131 |
2018 | 27 | 113 |
அரசு மருத்துவமனைகளை எடுத்துக்கொண்டால் கடந்த 10 ஆண்டுகளில் 29 உடல் உறுப்பு தானம் என்பதே அதிகபட்சமாக உள்ளது. அரசு மருத்துவமனைகளை காட்டிலும் தனியார் மருத்துவமனைகள் உடல் உறுப்பு தானம் பெறுவதில் அதிக கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தான ஆலோசகர் ஒருவர், ஏழை மக்கள் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு அவர்களின் உடல் உறுப்பு பெறப்பட்டு தேவையான விஐபிகளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் குறித்து பேசினாலே ''விஐபி யாரேனும் காத்திருக்கிறார்களா'' என அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டை பொறுத்தவரை கடந்த ஜூன் வரை 66 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.