நீலகிரி மலை ரயில் பாதையில் யானைகள் வழித்தடத்தில் சுவர் எழுப்பியது குறித்து விளக்கமளிக்க ரயில்வே துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மலை ரயில் பாதையில் யானைகள் வழித்தடத்தில் மிகப்பெரிய சுவர் எழுப்பப்பட்டுள்ளது குறித்து நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், குன்னூர் - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையில் கட்டப்பட்டுள்ள இந்த சுவரால், யானைகள் அபாயகரமான பாதையில் செல்வதாகவும், அதன் காரணமாக அவை பள்ளத்தாக்குகளில் விழும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, சுவர் எழுப்பிய விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க ரயில்வே துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மலை ரயில் பாதை வழியாக யானைகள் சுதந்திரமாக செல்ல ஏதுவாக உரிய தீர்வு காணும் வகையில் தமிழக வனத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.