அப்போலோவில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்ற சொன்னது யார்..? பி.ஹெச்.பாண்டியன் கேள்வி

அப்போலோவில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்ற சொன்னது யார்..? பி.ஹெச்.பாண்டியன் கேள்வி
Published on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஓபிஎஸ் ஆதரவாளர்களான பி.ஹெச்.பாண்டியன் மற்றும் மனோஜ் பாண்டியன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஹெச்.பாண்டியன், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அங்கிருந்த 27 சிசிடிவி கேமிராக்களை அகற்றச் சொன்னது யார்?, ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருந்ததே?’ என்று கேள்வி எழுப்பினார். அதேபோல, மேல்சிகிச்சைக்கு ஜெயலலிதாவை சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் விமானம் சென்னை வந்த நிலையில், அவரை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தது யார் என்றும் வினவினார். மத்திய அரசு வழங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தில் இருந்த ஜெயலலிதாவுக்கு, தேசிய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பை அகற்ற ஒப்புதல் அளித்தது யார் என்றும் கேள்வி எழுப்பிய அவர், ஜெயலலிதா மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மனோஜ் பாண்டியன், தமிழக மக்கள் சார்பாகவும், அதிமுக தொண்டர்கள் சார்பாகவும் ஜெயலலிதா மரணத்தில் சில சந்தேகங்களை முன்வைப்பதாகக் கூறினார். அவர் எழுப்பிய கேள்விகள்.

* ஜெயலலிதாவுக்கு எக்மோ சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளித்தது யார்?

* எய்மஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை விவரங்களை வெளியிடாதது ஏன்?

* அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது வந்த பார்வையாளர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படாதது ஏன்?

* அப்போலோவில் இருந்தபோது ஜெயலலிதாவின் கைரேகையைப் பதிவு செய்த மருத்துவரை விசாரிக்க வேண்டும்.

*ஜெயலலிதா கன்னத்தில் போடப்பட்ட நான்கு துளைகளுக்கு என்ன காரணம்?

* ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட உணவு வகைகளின் ஆய்வு குறித்த அறிக்கைகள் வெளியிடப்படாதது ஏன்?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com