ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக அந்த பொதுக்குழு செல்லாது என்று இதே சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்த தீர்ப்புக்கு தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்தித்துள்ளார்.
அவர் பேசுகையில், “இன்று வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு, ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு மூலம், இரண்டு முக்கிய விஷயங்களை நீதிமன்றம் சொல்லி இருக்கிறார்கள். ஜூலை 11ம் தேதி நடந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு செல்லும். இதன்மூலம், இடைக்கால் பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் மீண்டும் கிடைத்துள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கம் செல்லும். ஆக, பொதுக்குழு செயற்குழு சட்டப்படிதான் நடத்தினோம் அதனால் தர்மம் வென்றுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொள்வோம். இனி ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோ தான்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு வெளியே முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் பால கங்கா வெங்கடேஷ்பாபு, வேளச்சேரி அசோக் ஆகியோர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். ட்விட்டரில் மீண்டும் தான் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் என்பதை குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.