‘அதிமுக அலுவலகத்தில் ஓ. பன்னீர் செல்வம் காலைப் பிடித்துக் கதறினார் கே.பி. முனுசாமி’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ . பன்னீர்செல்வத்தின் இல்லத்தில், அவருடைய ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கொளத்தூர் தொகுதிக்கு வாய்ப்பு தருவதாகவும், மாவட்ட செயலாளர் பொறுப்பு வாங்கி தருவதாகவும் கூறி என்னிடம் கே.பி. முனுசாமி பணம் பெற்றார்.
2021 தேர்தலுக்குப் பிறகு கொறடா பதவி குறித்த பிரச்சனையின்போது அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் காலைப் பிடித்துக் கதறினார் முனுசாமி. ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, தர்மத்தின் தலைவன் என்று புகழ்ந்தவர் தான் கே.பி. முனுசாமி. எங்கள் உடன் இருந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் கூறி எட்டப்பன் வேலை பார்த்தவர் கே.பி. முனுசாமி. சூழ்நிலையால் முனுசாமியிடம் நிறைய முறை பணம் கொடுத்து, வாங்கியுள்ளேன். அதிமுகவில் பணம் கொடுத்தால் தான் பதவி கிடைக்கும் எனும் சூழல் தற்போது உருவாகிவிட்டது. பணம் வாங்கிக்கொண்டு பலபேருக்கு தேர்தலில் சீட் வாங்கி கொடுத்துள்ளார் கே.பி. முனுசாமி.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார், அவர் பதவியில்லாத பழனிசாமி. கே.பி. முனுசாமியிடம் பணம் கொடுத்தது எனக்கு குற்றமாக தெரியவில்லை, எனக்கு காரியம் சாதித்தால் போதும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட செயலாளர் பதவி வாங்கித் தருவதாக கூறி கேபி முனுசாமி என்னிடம் 1 கோடி பணம் கேட்டதற்கான ஆடியோவை இப்போது வெளியிடுகிறேன் என்றும், இதற்கு கே.பி. முனுசாமி பதில் கூறாவிட்டால் தங்கமணி, வேலுமணி குறித்த வீடியோவை வெளியிடுவேன் எனவும், கே.பி. முனுசாமி என்னுடைய காரில் 4 பணப்பைகளை எடுத்துச் சென்று பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனுக்கு வழங்கினார் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், கே.பி.முனுசாமி பணம் வாங்கியது தவறு என்றால், பணம் கொடுத்ததும் தவறுதானே என்ற கேள்விக்கு, தனக்கு அது தவறாக தெரியவில்லை என்றும், காரியம் சாதித்தால் போதும் என்பதே தனது எண்ணம் என்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.