வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்குள் எம்.பி என போடப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பெயர் ஆலய கல்வெட்டில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள அன்னபூரணி கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் நிதியுதவி அளித்திருந்தனர். இதனால், நேற்று ஆலயத்தில் திறக்கப்பட்ட கல்வெட்டில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் குமார், ஓ.பி.ஜெயப்பிரதீப்குமார் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில், முக்கியமான விஷயம் என்னவெனில், ரவீந்திரநாத் பெயருக்கு முன்பாக தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என எழுதப்பட்டிருந்தது.
தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் களத்தில் உள்ளார். வாக்குப் பதிவு கடந்த மாதம் 18ம் தேதி முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை 23ம் தேதிதான் நடைபெறவுள்ளது. வாக்குகள் எண்ணப்படவில்லை, முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ரவீந்திரநாத் எம்.பி ஆகிவிட்டார். இந்த கல்வெட்டு படம் சமூக வலைதளங்களில் நேற்று முதல் வேகமாக பகிரப்பட்டு வந்தது.
இதனையடுத்து, கல்வெட்டில் எம்.பி. என பெயரிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது போலி மருத்துவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது போல் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேனி தொகுதி வேட்பாளரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். தேனி குச்சனூர் கோயிலில் ரவீந்திரநாத்குமார் எம்.பி. என்று உள்ள நன்கொடையாளர் கல்வெட்டை அகற்ற வேண்டும் என்று மற்றொரு வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, ஆலைய கல்வெட்டில் இருந்து எம்.பி என எழுதப்பட்ட ரவீந்திரநாத் பெயர் மறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக குடும்பத்தினர் அனைவரது பெயரும் அதில் மறைக்கப்பட்டுள்ளது.