அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் தரப்பு அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்து.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கடந்த ஜூலை 11இல் பிறப்பித்த உத்தரவில், பன்னீர்செல்வம் குறித்து தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்துள்ளதால், பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை இன்று தள்ளிவைக்கும்படி வைரமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்று இன்று பிற்பகலுக்கு வழக்குகளை நீதிபதி தள்ளிவைத்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதி ஏன் என கேள்வி எழுப்பியபோது, ஓபிஎஸ் தரப்பில், ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தனக்கு எதிரான கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளதாலும், பொதுக்குழு நடக்க இருந்த கடைசி நேரத்தில் உத்தரவு பிறப்பித்ததாலும், இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பு விளக்கத்தால் அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்லல், கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தியை பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும், திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். மனுதாரர் (ஓ.பி.எஸ்.) குறித்து தன் உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையிலேயே தற்போதும் அவரது தரப்பு செயல்பாடு உள்ளதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அதன் பின்னர், நீதிபதியை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக அளித்த கோரிக்கை குறித்த நடைமுறையை தனியாக பார்த்துக் கொள்ளுங்கள் என நீதிபதி தெரிவித்துவிட்டார். உங்கள் மனுதரரரை தவறாக வழிநடத்தாதீர்கள் என்றும், நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என்றும் ஓபிஎஸ் தரப்பிடம் அறிவுரை கூறினார். அப்போது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், அறியாமையால் ஒருசில வழக்கறிஞர்கள் செயல்படலாம் என்றும், தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்றும் நீதிபதியிடம் தெரிவித்தார்.
பின்னர் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கும் ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, மற்றொரு மனுதாரர் வைரமுத்துவின் கோரிக்கையின் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை இன்று(ஆகஸ்ட் 5) பிற்பகலில் விசாரிப்பதாக தெரிவித்து, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.
இதுகுறித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்த கருத்துகள் குறித்து தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியிடம் ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் முறையீடு செய்தார். நீதிபதியை மாற்ற வேண்டுமென கடிதம் கொடுத்துள்ள நிலையில் இன்று அவரே வழக்கை விசாரிப்பதாக கூறியதையும், மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்களுக்கு எதிராக நேற்று பிற்பகலிலும் கருத்துகளை பதிவு செய்துள்ளதால், வழக்கை உடனடியாக வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அப்போது, நீதிபதியை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோரின் கடிதங்களை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தெரிவித்தார்.
இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிய மனுவை வாபஸ் பெற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வலியுறுத்திய நிலையில், பன்னீர்செல்வம் தரப்பில் தனி நீதிபதியிடம் மன்னிப்பு கோரப்பட்டது. மேலும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பே வாதிட விரும்புவதாகவும் ஓ பி எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வழக்கு சற்றுநேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.