திமுக அரசு, மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகளை போட்டு நசுக்க வேண்டும் என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது என்று ஓபிஎஸ் குற்றம்சாட்டி இருக்கிறார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை எனவும், எனவே அச்சப்பட தேவையில்லை எனவும் முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். நீதிமன்ற அனுமதியுடன் தான் மீண்டும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
வெளிநடப்பு செய்த அதிமுகவினர் சட்டப்பேரவைக்கு வெளியே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை அதிமுகவினர் சந்தித்தனர். அப்போது பேசிய ஓபிஎஸ், ‘’நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்பவைத்து இன்று ஆட்சியில் இருக்கும் திமுக அரசு, மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகளை போட்டு நசுக்க வேண்டும் என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் சட்டப்பேரவையில் குரல் கொடுத்தார். அதற்கு வாய்ப்பு தராமல், என்ன சொல்கிறார் என்று கேட்காமல் அடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றனர். ஜனநாயக விரோத நடவடிக்கையில் திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. பொய் வழக்குகளை போட்டு அதிமுகவை செயல்படவிடாமல் இருக்க திட்டம் தீட்டுகின்றனர். எவ்வித வழக்குகளுக்கும் அதிமுக அஞ்சாது. ஏனென்றால் அது பொய்யான வழக்கு என்று மக்களுக்கு தெரியும். எங்களுடைய ஜனநாயக கடமைகளை நாங்கள் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருக்கிறோம். திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து இன்றும் நாளையும் சட்டமன்றத்தை புறக்கணிக்கிறோம்” என்றார்.